பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள்போல் நடத்துவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயச்சார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம்.
நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறீர்கள். மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். இந்தியாவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் முறை இதுதானா?
கூட்டாட்சி முறையில் மத்திய அரசு அறிவித்த இதுபோன்ற பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற முடியாது. இப்படி நீங்கள் அறிவித்தால் மாநில அரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றன. உங்களுக்குக் கீழ் இயங்கவில்லை.
கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயற்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.