கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது. ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகள் நாளை(திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் நிலையில், புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் நாளை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னரே அறிவிப்பு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.