தமிழகத்தின், சென்னை, கோவை, மதுரையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும், சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், அம்பியூலனன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள், ATM போன்றவை வழக்கம் போல் செயற்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயற்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
உணவகங்களில் தொலைபேசி மூலம் ஓர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் வழங்குநர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், IT நிறுவனப் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்பதோடு பிற தனியார் நிறுவனங்கள் செயற்பட அனுமதியில்லை” என முதல்வர் அறிவித்துள்ளார்.





