தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம், கீழடி, துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார், சிவகளை, ஈரோடு மாவட்டம், கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் துவக்கமாக, கீழடியில் மாத்திரம் பெப்ரவரி மாதம் அகழாய்வு துவங்கியது. இம்மாதம், 23ல், ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு துவங்க இருந்தது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்ததால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கீழடியில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.
இது குறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது, “நாட்டில் தொற்றுநோய் பரவல் தடுப்புக்காக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூட்டமாக கூடுவது தவறாகும்.
கீழடி அகழாய்வு பணியில், 20 பேர் இணைந்து பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளதால், அகழாய்வை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். இருப்பினும், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார், துாத்துக்குடி மாவட்டம், அழகன்குளம், சிவகங்கை மாவட்டம், கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த அகழாய்வுகளுக்கான இடைக்கால அறிக்கைகள் மட்டுமே, இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றிற்கான விரிவான ஆய்வறிக்கைகள் தயாரிக்கும் பணியில், சம்பந்தப்பட்ட அகழாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கீழடியில், 2019ல் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை வகைப்படுத்தும் பணியிலும், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இந்த விடுமுறையிலும், தொல்லியல் துறையில் ஆக்கப்பூர்வமான பணிகள் நடந்து வருகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.