சிரிய இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் துருக்கி வான்வழி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் முக்கிய திருப்பங்களைப் பதிவு செய்யும் அல்-மஸ்டர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவின் அலெப்போவில் உள்ள செர்பெக் நகரில் சிரிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில் இந்தச் சந்திப்பைக் குறிவைத்து துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சிரிய இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கிய இராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.