மன்னிக்க முடியாத துரோகம் என்று மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன. என்றும் பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து – பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் தொல்லியல் துறை ஒன்று செயற்பட்டு வருகிறது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து – பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது என்றும் மத்திய – மாநில உறவுகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்த ஸ்டாலின் திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து – வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.