கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலை, பொருளாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத, மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இத்தகைய காலகட்டங்களில் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், நிதிப் பற்றாக்குறை மாநில பொருளாதார நிலையில் (GDP) 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதைத் தளர்த்தி, மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை தவிர்த்த வேறு பிற வடிவங்களில் மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என்றும், ரிசேர்வ் வங்கியிடமிருந்து கடன்பெற்று மத்திய அரசு இந்த நிதியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சிப் பங்களிப்பு அடிப்படையில் இந்த சிறப்பு தொகுப்பு நிதியை பகிர்ந்து வழங்குவதோடு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் நலன் கருதி, துணிச்சலான, கடினமான, புதுமையான முடிவுகளை எடுக்கும் பிரதமர், இந்த சிறப்புக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.





