தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்து. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.
மேலும், 25 இலட்சம் என்-95 முகக் கவசங்களைக் கொள்வனவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன் 1.5 கோடி முகக் கவசங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதுதான். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.
கொரோனா பரவலில் தமிழகம் 2ஆவது கட்டத்திலிருந்து 3ஆவது கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. கொரோனா விடயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசியல் செய்வது என்பது தேவையற்றது” என்று குறிப்பிட்டார்.





