
தற்காலிகமாக அமைப்பதற்கு மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு குறித்த வழக்கு நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மாந்தை ஆலய நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வழக்கு விசாரணையின் போது, சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்ததன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய மேல் நீதிமன்றம், இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் மன்னார் மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவு மற்றொரு மதப்பிரிவினரால் உடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விவகாரத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த வளைவை மீள அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினர் எடுத்தனர். இதன் ஒரு கட்டமாக மன்னார் பிரதேச சபையால் வளைவை மீளமைப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
எனினும், இதையடுத்து பிரதேச சபையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மீண்டும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாகிர் கையெழுத்திட்டு திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு கடிதம் அனுப்பிவைத்தார்.
இதனிடையே, திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். அத்துடன் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு குறித்த பிரச்சினைக்கான நிலையான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில், திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக வளைவு அமைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
