இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம் கனடா அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்கரியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த உதய நிஷான் பெர்னாண்டோ, சுலக்ஷணா தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், பெர்னான்டோவுக்கு கடைசி வழி மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பம்தான்.
நாடு கடத்தும் திகதி நெருங்கிவரும் நிலையில், அந்த மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பத்திற்கு பதில் வரும் வரையிலாவது எப்படியாவது கனடாவில் இருக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது பெர்னாண்டோ குடும்பம்.
ஆனால், அந்த விண்ணப்பத்திற்குப் பதில்வர ஒரு ஆண்டுவரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விண்ணப்பத்திற்குப் பதில் வரும் வரையிலாவது தங்களுக்கு சிறிது அவகாசம் தருமாறு பெர்னாண்டோ குடும்பம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெர்னாண்டோவை வளர்த்த மாமா இலங்கையில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெர்னாண்டோ மனைவியுடன் இலங்கையிலிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடினார். மீண்டும் இலங்கைக்கு திரும்புவது தனது குடும்பத்துக்கு ஆபத்து என்று அவர் அஞ்சுகிறார்.
ஆனால், கனடா அரசாங்கம் தங்களை இலங்கைக்கு திரும்பிப் போகச் சொல்வதாக தெரிவிக்கும் பெர்னாண்டோவின் மனைவி சுலக்ஷனா, எங்களைப் பற்றிக் கூட கவலையில்லை, எங்கள் குடும்பத்தில் இரண்டு கனேடிய குடிமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நலனையாவது கருத்திற்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்கிறார்.
“சட்டப்படி என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்துகொண்டுதானிருக்கிறோம். நாங்கள் ஒரு நாள் கூட சட்டவிரோதமாக கனடாவில் இருக்கவில்லை.
பாதுகாப்பான ஒரு இடத்தைத் தாருங்கள், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம். நாங்கள் ஏழு ஆண்டுகளாக கனடாவில் வாழ்கிறோம். வரி செலுத்துகிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்” என்கிறார் சுலக்ஷனா.