 சிறந்த செயற்றிட்டங்களை  ரணிலால் முன்னெடுக்க முடியாமல்
சிறந்த செயற்றிட்டங்களை  ரணிலால் முன்னெடுக்க முடியாமல் போனமைக்கு அவரது பலவீனமே காரணமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். புதிய தலைவர் வர வேண்டும் அப்போதுதான் நாட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்றார்கள்.
ஆனால் உண்மையாக பார்ப்போமேயானால், இது புதிய அரசாங்கம் இல்லை. அதாவது நிமல் சிறிபாலடி சில்வா, சந்திரிகா அரசாங்கத்திலும் இருந்தார் மஹிந்தவின் அரசாங்கத்திலும் , ரணிலுடைய அரசாங்கத்திலும் அமைச்சர் பதவியில் இருந்தார். தற்போது கோட்டாபய அரசாங்கத்திலும் அமைச்சர் பதவியில் இருக்கின்றார்.
அதேபோன்று மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, அநுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனர்.
மேலும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் போது அதிகமாக பேசப்பட்ட பொதுத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் டிசம்பர் மாதம் வரும்போது முழுமையாக குறைவடைந்ததை அவதானிக்க கூடியதாக இருந்திருக்கும்.
அந்தவகையில் செப்டெம்பர் மாதம் வரைக்கும் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இதனால் கட்டாயமாக மின்சாரம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டுகளுக்கு விலை அதிகரிக்கப்படும்.
இதேவேளை கடந்த காலத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சார்புடையவராக ரணில் இருந்தபோதிலும் அவரால் அந்நாடுகளுடன் இணைந்து எந்ததொரு நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியவில்லை.
இதற்கு காரணம் அவரது பலவீனமே தவிர, விருப்பமின்மை கிடையாது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலகுவான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
