ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்வதற்கு தடைவிதித்து அரச தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2இல் ஆரம்பமாகி ஏப்ரல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரச தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும் பெண் ஆசிரியர்களைக் கொண்டே சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி முறைப்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.