இணையத்தளம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துவிட்டோம் என ஈரானிலுள்ள ஹக்கர் குழுவொன்று அறிவித்துள்ளது.
ஈரான் இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அந்தக்குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
‘Federal Depository Library Program (fdlp.gov)’ எனும் இணையத்தளத்தில் நுழைந்து தளத்தின் பெயரை ‘ஈரானிய ஹக்கர்கள்’ என குறித்த குழு மாற்றியுள்ளது.
இந்தத்தளம் அமெரிக்க குடிமக்களுக்கு அரசாங்க வெளியீடுகளை எந்த செலவுமின்றி அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. தளத்தின் பெயரை மாற்றிய பின்னர், அவர்கள் ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனி மற்றும் ஈரானின் கொடியின் படங்கள் என்பவற்றையும் அத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்காவால் கொல்லப்பட்ட தளபதி காசிம் சோலெய்மனியின் பல ஆண்டுகால இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு வெகுமதி என்பதை எடுத்துக் காட்டும் படங்களையும் அப்பக்கத்தில் ஹக்கர்கள் குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கன்னத்தில் அடிப்பதுபோலும் அவரது வாய்வழியாக இரத்தம் வருவதுபோல் உருவாக்கப்பட்ட போஸ்டரில் ஈரானிய ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டு இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, “கடவுளின் சக்தியுடன் காசிம் சோலெய்மனியின் வேலையும் பாதையும் நிறுத்தப்படாது எனவும் ஏனைய தியாகிகளின் இரத்தம் மற்றும் இரத்தத்தால் இழிந்த கைகளைக் கறைபடுத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் காத்திருக்கிறது” என்று குறித்த ஹக்கர் குழு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக அமெரிக்கத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை.