
ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர் முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஒரு பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் விழா குழுவை மாற்றி அமைக்க வலியுறுத்தியும், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்தவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைத்து நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோன்று, அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளையும் மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ், நடத்துவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு மதுரை மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குறித்த விளையாட்டில் பங்கு பெரும் வீரர்களுக்கு ஏற்கனவே வயதுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
