(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமையை பெற்றுத் தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
வாகரை மாங்கேணி பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
2009ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ரணில் அரசாங்கத்தில் நிறைய ஆதரவு கிடைத்தது. இவர்கள் பின்தங்கிய கிராமங்களுக்கு பல பணங்களை கொண்டு வந்து உதவிகளை செய்திருக்க முடியும். ஆனால் இவர்கள் எதையும் செய்யவில்லை. மாறாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எப்படி இருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் எமது மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மக்கள் மத்தியில் வந்து ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை எங்களுக்கு ஊடாகத்தான் செய்ய முடியும் என்று கூறுகின்றார்.
இது நாடு பூராகவும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்பு. இது சமுர்த்தி பெறும், சமுர்த்தி பெற தகுதியுள்ளவர்களுக்குத் தான் வழங்கப்படவுள்ளது. இந்த வேலைவாய்பிற்கு எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் பங்கு இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமையை பெற்றுத் தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார்கள். இது கற்பனை நடைமுறைச் சாத்தியம் அல்ல. சர்வதேசங்கள் பிரச்சனையில் தலையிட்டும் எந்த தீர்வும் கிடைக்க போவதில்லை. நாங்கள் ஒற்றுமைப்பட்டு அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வோம்.
தமிழ் மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் மட்டும் தான். வேறு யாரும் இல்லை. தேசிய தலைவரின் குணம், நடவடிக்கை, திட்டங்கள், திட்டம் வகுக்கும் தன்மைகள் எல்லாம் கருணா அம்மானிடம் மாத்திரம் உள்ளது என்றார்.
வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.