
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை அரசு கொல்லக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு படையினர் திக்குமுக்காடி வருகின்றனர்.
இதற்கிடையில், இப்போராட்டத்தில் பொதுமக்கள் மீது அந்நாட்டு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் கூறியிருந்தார். இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரானில் நடைபெறும் போராட்டங்களை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்களை அரசு கொல்லக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியே தற்போது போராட்டமாக மாறியதாக கூறப்படுகின்றது.
