பல்கலைக்கழகங்களில் மாணவர்களைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவ, மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதுடன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மனித சங்கிலி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒற்றுமையுடன் எந்த வேறுபாடுமின்றி தங்கள் போராட்டம் தொடரும் என்று உறுதிமொழி எடுத்த மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.