மக்கள் கவலைப்படத் தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “அசாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த வரைபு நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என தெரிவிக்கிறேன்.
நான் உங்களுக்கு ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன். உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. இது தொடர்ந்து செழித்து வளரும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த வரைபு நாடாளுமன்றின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி இன மக்களின் தனித்துவம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த சட்ட வரைபுக்கு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரைபு சட்டமாக நிறைவேறும் பட்சத்தில் பங்களாதேஷில் இருந்து தங்கள் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை அளித்தால் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்ற பயத்தில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.
அத்துடன் அசாம் மாநிலத்தில் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வதந்திகளைத் தடுக்கும் முகமாக அங்குள்ள 10 மாவட்டங்களுக்கும் இணைய இணைப்பு முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்று மோடியால் இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.