
சர்ச்சைக்கு கலந்துரையாடல் மூலம் தீர்வுகண்டு, முன்நோக்கிப் பயணிப்பதொன்றே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “சஜித் பிரேமதாசவிற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, முன்நோக்கிப் பயணிப்பதொன்றே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஒவ்வொருக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன.
ஆனால் தற்போதைய சம்பவங்களை நோக்கும்போது நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமானதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான முறையில் பயணிப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சி என்பது மிகவும் சக்திவாய்ந்த பழமையான கட்சியாகும். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக எம்மால் மேலும் வலுவடைய முடியும்” என்று தெரிவித்தார்.
