பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில்தான் களமிறங்கும் என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
அத்தோடு, கடந்த காலங்களில் சூழ்ச்சி செய்தவர்கள், தங்களின் சின்னம் தொடர்பாக முடிவெடிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “ஒரு கொள்கையில் இருப்போரைத்தான் நாம் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டும். தவளைகள் போல் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்தொன்றைக் கூறி வருகிறார். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாம் எடுக்க அவர் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த யோசனை அவருக்கு 2015 ஆம் ஆண்டே வந்திருக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் நாம் இன்று பாரிய வெற்றியடைந்துள்ளோம். சுதந்திரக் கட்சி இணைவினால் மட்டும் இந்த வெற்றி கிடைக்கவில்லை.
எனவே, எமக்கு அறிவுரை கூறுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். இதற்கான தகுதியும் அவர்களுக்குக் கிடையாது. தற்போது, எந்தச் சின்னத்தில் நாம் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கலந்தாலோசித்து வருகிறார்கள்.
இவர்களிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். நாம் நிச்சயமாக பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில்தான் களமிறங்குவோம். கடந்த காலங்களில் சூழ்ச்சி செய்த எவரும் எமது சின்னத்தை தீர்மானிக்க முடியாது” என்று தெரிவித்தார்.