
வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரபிரதேச தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உத்தரபிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 40 நாட்கள் நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அயோத்தி வழக்கு தீர்ப்பின் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
