
முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி தன்டேவாடா நகரில் பொடாலி என்ற கிராமத்தில் புதிய பொலிஸ் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து பொலிஸார் அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தன்டேவாடா எஸ்.பி.யான அபிசேக் பல்லவா குறிப்பிடுகையில், ”நக்சலைட்டுகள் கொடுத்த அழுத்தத்தினால் கிராமத்தினர் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகாம்களை முற்றுகையிட முயன்றனர். இதன்பின்பு கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் அவர்களை கலைத்தனர்” என கூறியுள்ளார்.
சத்தீஷ்காரில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளன. அவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட சில தொகுதிகளில் நக்சலைட்டுகள் போஸ்டர்களை ஒட்டி வாக்குப்பதிவை புறக்கணிக்கும்படி கூறி பொதுமக்களை மிரட்டி எச்சரித்தனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. ஒருவர் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வாகனமும் வெடித்து சிதறியது. இதனுடன் பாதுகாப்பு பணியில் சென்ற வீரர்களும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
