குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
கொலை மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்ததாக கூறப்படும், இருவரில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர்.
இதில், 22 வயதான ரொறான்ரோவைச் சேர்ந்த பெத்தேல்ஹெம் கெலெட்டா, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவரை கொலை செய்தவராகச் சந்தேகிக்கப்படும் ரொறான்ரோவைச் சேர்ந்த 30 வயதான அபோமா டாபா, அதிர்ச்சியால் உயிரிழந்திருக்க கூடுமென அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி யோங் வீதிக்கு அருகிலுள்ள 141 டேவிஸ்வில்லே அவென்யூவில் உள்ள கட்டிடமொன்றில் இருந்து இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நடப்பு ஆண்டில் ரொறன்ரோவில் இடம்பெற்ற 59ஆவது கொலை இதுவாகும்.
இருவரினதும் உறவு முறை, சம்பவ இடத்தில் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதா போன்ற விடயங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.