முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரட்னம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் காலங்களில் நாட்டில் தங்களால் இனங்காணப்பட்ட பல விடயங்களான சிறுபான்மையினரின் தேவைகள், வெளிநாட்டு கொள்கைகள், நிதிக் கொள்கைகளை அமுல்படுத்துதல், நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஓழிப்பு, இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல், பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு, மூவினமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தேசியகொள்கை வகுத்தல், கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, கல்முனைப் பிரதேசசெயலகம் தரம் உயர்த்துதல், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, கல்வி சீர்திருத்தம், விவசாயநீர்பாசனக் கொள்கை, பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு இது போன்ற இன்னும் பல விடயங்களை அமுல்படுத்துவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியதோடு, தேர்தல் மேடைகளிலும், பிரச்சாரம் செய்தீர்கள்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விடயங்களுக்கு மக்கள் முன் உத்தரவாதம் அளித்திருந்தீர்கள். அந்த வகையில் சில விடயங்கள் உள்ளடக்கப்படும். தற்சமயம் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.
சிங்கள மக்கள் அளித்த அதிகபடியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் முழு நாட்டினதும், முழு இனங்களினதும் ஜனாதிபதி நீங்கள். அந்தவகையில் சிறப்பான வெற்றியை எட்டியுள்ளீர்கள். தமிழ் மக்களுக்கு செய்யும் சேவையூடாக அம்மக்களின் விரக்தியிலிருந்து போக்குவீர்கள் என்னும் நம்பிக்கை எமக்கு உண்டு.
எனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த வேண்டும். இம்மாவட்டமானது மூவீன மக்களையும் உள்ளடக்கிய மாவட்டமாகும். இங்கு கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் நிதி ஓதுக்கீட்டின்போது கட்சி சார்பாகவும், இனம் சார்பாகவும், தனிப்பட்டரீதியிலும், சமூகநலன் இல்லாமல் சில நிதி ஓதுக்கீடுகள் நடைபெற்றுள்ளது.
இதன் தாக்கத்தை தமிழ் மக்கள் அனுபவித்தவர்கள் இங்கு சமூக நலனோடு மூன்று இனங்களும் பாதிக்கப் படாமல் இருப்பதற்கு உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
கிழக்கு மாகாணம் என்பது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமாகும். வடக்கிற்கு தமிழர் ஓருவர் ஆளுனராக நியமனம் செய்யப்பட்டதைப் போல் கிழக்கு மாகாணசபைக்கும் கட்சி நலன்பாராது, இனம்பாராது, மதம்பாராது ஊழல்மோசடியற்ற நல்லதொரு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமித்து தாங்கள் முன்னுதாரணமாக எல்லா இன மக்களுக்குமான ஜனாதிபதி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
நல்ல செயற்திட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை இனியாவது வெல்வதற்கு வழிசமைப்பீர்கள் என நம்புகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.