ஊழலற்ற ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் எங்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக ஜனாதிபதி இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அன்று நாங்கள் வாக்களித்த ஜனாதிபதி எங்களுக்கு ஒத்தழைப்பு வழங்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்களை மறக்காமல் எங்களுக்கு தேவையான வேலைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றிக் கொடுத்தார். அதன் பயனாக தனி வீட்டுத் திட்டம், கல்வி அபிவிருத்தி என்பன எங்களுக்கு கிடைத்தது.
அது மட்டுமல்லாமல் எங்களுடைய மக்களை தோட்ட மக்கள் என்ற பதத்தை நீக்கி அந்த அமைச்சையே மாற்றியமைத்து அதற்கு புதிய கிராமங்கள் என்ற பெயரை கொடுத்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பதை நாங்கள் மறந்து விட முடியாது.
இந்த மலையக மக்கள் உங்களுக்காக வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள். எனவே அவர்களுடைய வாக்கை பெற்றுக்கொண்டு வெற்றி பெற்ற பின்பு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.
எங்களுடைய மலையக மக்கள் என்றுமே நன்றிக்கடன் மறக்காதவர்கள். அந்த அடிப்படையிலேதான் எதிர்வருகின்ற தேர்தலில் அவர் பெற்றுக் கொடுத்த வாக்குரிமையை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றார்கள்.
ஜக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற ஏனையவர்களை விட இந்த மக்களின் வாக்குகளை கேட்கின்ற உரிமை உங்களுக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.