திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்களை, ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களின் அணிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதோடு, திறமையான வீரர்களுக்கும் வலைவிரிக்கின்றன.
இதற்கமைய இதுவரை ஐ.பி.எல். தொடரில் சம்பியன் கிண்ணம் வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அண்மையில் அணிக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்தது.
இதற்கமைய முதற்கட்டமாக இரண்டு வருட ஒப்பந்தத்தில் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மைக் ஹெஸ்சன், ஒப்பந்தம் முடிவதற்கு முன்னதாகவே தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதற்கு பின்னர், அணியின் செயற்பாடு இயக்குநராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவ்வப்போது, கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த அஸ்வினை விடுவிக்க அந்த அணி, தீர்மானித்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அண்மையில், அஸ்வின் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிப்பார் என்று தெரிவித்தார்.
தற்போது, முன்னதாகவே அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்த டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு அஸ்வின் மீண்டும் செல்ல இருப்பதாக கூறப்படுகின்றது.
இரு அணிகளுக்கு இடையில் உடன்பாடு எட்டியவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அஸ்வின் அணித்தலைவராக செயற்பட்ட 28 போட்டிகளில், பஞ்சாப் அணி, 12 வெற்றிகளையும், 16 தோல்விகளையும் பெற்றுள்ளது. கடந்த வருடம் 7ஆவது இடத்தினையும், இந்த வருடம் 6ஆவது இடத்தினையும் பிடித்தது.
இரண்டு வருடங்களிலும் கடைசிக் கட்டத்தில் படு மோசமாக விளையாடியதால் பிளே ஓஃப் சுற்றுக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது.
இதனால் இந்த வருடம் புது அணி, புதிய பயிற்சியாளர்கள், புது அணித்தலைவருடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அஸ்வினை வேறொரு அணிக்கு விட்டுக்கொடுக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பஞ்சாப் அணி, 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அஸ்வினை இந்திய மதிப்பில் 7.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின் டெல்லி அணிக்குத் தேர்வாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
டெல்லி அணியில் ஏற்கெனவே அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, ராகுல் டெவாடியா, ஜலஜ் சக்ஸேனா, மார்கண்டே, சுஜித், சந்தீப் லமிசானே என ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.
இதுவரை 139 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 375 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.