வாக்குரிமையை அனுபவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை தயார்படுத்துவதற்கான காலம் வந்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “‘இலங்கையைச் சேர்ந்த இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்கு இல்லாமல் போகின்றதை அவதானிக்கக்கூடியவாறுள்ளது.
இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை செலுத்திவரும் இவர்கள், அதாவது எமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருப்பது மிகவும் பாரதூரமான விடயமாக உள்ளது. ஆகையினால் இது தொடர்பான ஒரு சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்குரிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிபவர்களில், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாத்திரம் தேர்தலுக்காக இலங்கைக்கு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் பணிபுரியும் நாட்டிலேயே உயர்ஸ்தானிகராலயத்தினூடாக வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக இலங்கைக்கு வருகின்றதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் அநேகமானோருக்கு எமது நாட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதால் இவர்களும் வாக்களிக்கும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுகின்றது” என வலியுறுத்தியுள்ளார்.