குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், அங்கல்ல கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு திருமண வீட்டின் பின்புறம் 6 வயது பெண் குழந்தை வர்ஷிதா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் அப்பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, பின் கொல்லப்பட்டமை தெரிய வந்தது.
இச்சம்பவத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பொலிஸார் கண்காணிப்பு கமெரா காட்சிப் பதிவுகளை ஆராய்ந்து, சந்தேகத்துக்கு இடமான இருவரின் புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இச்சம்பவம் என் நெஞ்சை உலுக்கியுள்ளது. சிறு பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சந்தேகநபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.