வன்கார்ட் வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கில் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து ,கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளனர்.
அவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.