காட்டுத் துறையில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை மாளிகைக் காட்டுத் துறையில் இருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 3 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் மாளிகைக் காடு கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தினர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பாதுகாப்பு மையத்திற்கு காணாமல் மீனவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கி படகுகள் தேடி வருவதாக கல்முனை கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
மேலும் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி காணாமல் போன மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கையிலிருந்து 350 மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகினை கரைக்கு கொண்டு வரமுடியாது என சர்வதேச கடல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இந்த சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.