யாழ்ப்பாணம் – நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சாவகச்சேரி நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த விசாரணையின்போது நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் இராணுவத் தளபதி சார்பாக ஆஜரான பிரதிமன்றாடியார் நாயகம் சேத்திய குணசேகர, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் கவனத்தில் இருப்பதால், இன்று எடுத்துக்கொள்ளக் கூடாது என வாதம் செய்தார்.
மனுதாரர்கள் சார்பான ஆஜரான சட்டத்தரணி கு.குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோர், இது தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிவித்தல் தரப்படவில்லை எனவும், உயர் நீதிமன்றத்தால் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படக் கூடாதென எந்தவித கட்டளைகளும் ஆக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த சாவகச்சேரி நீதவான் ஏற்கனவே ஒதுக்கப்பட்டவாறு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
அதன்போது பிரதிமன்றாடியார், ஓக்டோபர் மாதத்தில் திகதி கேட்க, நீதவான் எதிர்வரும் ஒக்டோர் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
                 

 



