சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சம்பந்தப்படடது எனவும் அதில் வெளிச்சக்திகள் தலையிடக்கூடாது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இந்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் நாட்டின் இறையாண்மையின் அடிப்படையிலானது என்று வலியுறுத்தியதுடன், தேவையற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் பொதுச் சேவை பதவியுயர்வுத் தீர்மானங்கள் மற்றும் உள்ளக நிர்வாக செயன்முறைகளை பாதிக்கும் வகையிலான சர்வதேசத்தின் முயற்சிகள் தேவையற்றவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.
அத்தோடு சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் இயற்கை நீதிக்கு முரணானது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.