இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் விரும்பத்தக்க நட்புறவு உள்ளதாக ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய வெளியகத் திட்டத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கன்னர் வியகென்ட் தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கையுடனான இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கிரேஸ் ஆசீர்வாதம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கன்னர் வியகென்டை சந்தித்துப் பேசினார்.
இதன்போது, அண்மைக் காலமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டுவரும் நட்புறவு மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போதே வியகென்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பாகவும், பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் வியகென்ட் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தக வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் அவர் கவனஞ்செலுத்தியுள்ளார்.





