யேமன் நாட்டு இராணுவப்படையினரின் அணிவகுப்பு நிகழ்வின் போது நடாத்தப்பட்ட ஏவுகணை மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.அந்நாட்டின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான யேமனில் சவூதி தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவு பெற்று ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த அரசிற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ள போதும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி புரட்சி படைகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் காரணமாக யேமன் அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு நாடுகளிலொன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் படைகள் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், அந்நாட்டின் முக்கிய நகரமான ஏடனில் முகாம் அமைத்து தங்கியுள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதியில் இராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த படைகளின் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.





