குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்ததையடுத்து, பா.ஜ.க. மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்றார்.
இதையடுத்து, அவரது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.
எனவே, தமிழக துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், “கர்நாடக முதல்வரானதற்கு என் சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
4-வது முறையாக முதல்வராகியுள்ள நீங்கள், கர்நாடக மாநிலத்தை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன். மேலும், மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகம், கர்நாடகம் இடையிலான சுமூக உறவு மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என பதிவிட்டுள்ளார்.