வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றதா என்பது குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதியரசர்கள் ஜானக் டி சில்வா மற்றும் என்.பந்துல கருணாரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் குறித்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இதன்போது இப்பகுதியில் பாரிய காடழிப்பு நடக்கிறது என சுற்றுச்சூழல் நீதி மையம் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர். இதன் பின்னர் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் தெரிவித்தனர்.
இந்த மனு மீதான தீர்ப்பு கடந்த ஆண்டு ஓகஸ்ட் 6 ஆம் திகதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதியரசர் மஹிந்த சமயவர்தன அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியமையின் காரணமாக குறித்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
                 

 



