யாழ். மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள குறித்த செயற்திட்டத்தின் அலுவலகத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம்செய்த அமைச்சர் மனோ கணேசன் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆராய்வில் ஈடுபட்டனர்.
பொறியியலாளர் குகனேஸ்வர ராஜாவினால் முன்மொழியப்பட்டு, பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தனவினால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்ட நிலையில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.
‘வடமராட்சி களப்பு’ நன்னீர் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நிதியுதவி வழங்கவேண்டுமென வடக்கு ஆளுநரால் அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமைச்சர் நிதியுதவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இந்த செயற்திட்டம் தொடர்பாக அமைச்சருக்கு தெளிவுபடுத்துவற்கும், செயற்திட்ட பகுதியினை நேரடியாக கண்காணிக்கும் நோக்கிலும் இன்று இந்த விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வட. மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.