
சந்தேக நபரை இன்று (வியாழக்கிழமை) சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிவான் மஞ்சுல ரத்னாயக்க அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
அத்தோடு குறித்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் சந்தேக நபரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சிலாபம், சேதவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீடித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்த வகையில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை பொல்லால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் மூத்த மகனான 26 வயதுடைய இஷான் சதுரங்க அபேசேகர கடந்த திங்கட்கிழமை சிலாபாம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து இஷான் சதுரங்க பொலிஸாரால் சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் சந்தேக நபரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
