
கூட்டணியில் பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வரும் 18ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களை தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 உறுப்பினர்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. கூட்டணியில் தோழமைக் கட்சியான பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று மதியம் மாநிலங்களவையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதில், முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோரது பெயர்களை அறிவித்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள ஓரிடத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வரும் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யவுள்ளனர்
