LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°Cஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 21, 2019

பல தசாப்தங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள்

பல தசாப்தங்களாகவே திட்டமிட்டு இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றங்கள், இத்தனை தசாப்தங்களான பரிணாம வளர்ச்சி பெற்று தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைத்துள்ளதாக பேரவையின் இணைத் தலைவர் வி.நவனீதன் வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து வரலாற்று ரீதியாக தெரிவிக்கையில்,

“இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டிலே வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் கட்டமைக்கப்பட்ட முறையிலேயே தமிழர்களுடைய இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடிய வகையில் சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்திற்கு காலம் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றது.

அந்த வகையில், 1947 ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தினுடைய விவசாய அமைச்சராக இருந்திருக்க கூடிய டி.எஸ் செனநாயக்க, 1947ஆம் ஆண்டிலேயே விவசாயக் குடியேற்றங்கள் என்ற பெயரிலே 12 குடியேற்றங்களை உலர் வலயத்திலே மேற்கொண்டார்.

இந்த 12 குடியேற்றத் திட்டங்களுக்காகவும் கிட்டத்தட்ட 30 மில்லியன் ரூபாயை அவர் அக்காலத்திலேயே செலவழித்துள்ளார். ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட 10,000 ரூபாயை அக்காலத்திலேயே செலவழித்தால் அதற்குப் பின்னால் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் அதே டி.எஸ். செனநாயக்க, இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்ற கையோடு கிழக்கு மாகாணத்திலே பரவலாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டார்.

இதன்படி, கல்லோயா திட்டத்தினூடாக உலர் வலயத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தாலும் அதன் மறைமுக நோக்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருந்திருக்கின்றது. அதற்கு சான்றாகவே 1949ஆம் ஆண்டு பதவியா பிரதேசத்திலேயே ஒரு சிங்கள குடியேற்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் டி.எஸ். சேனநாயக்க கலந்து கொண்டு பேசினார்.

அதன்போது, ‘இன்று உங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி இப்புதிய கிராமத்திலேயே குடிபுகுகின்ற நீங்கள் இந்த தேசத்திலே வரலாற்றிலேயே பேசப்படுவீர்கள். கடலில் அடித்துச் செல்லப்படுகின்ற மரக்குச்சிகள் கரையொதுங்கி காப்பரணாக இருப்பது போல சிங்கள மக்களுக்கு காப்பரணாக நீங்கள் இருப்பீர்கள். சிங்களவர்களுக்கான இறுதியுத்தம் இந்த பதவியாவிலே தான் தொடங்கப்படும். எதிர்காலத்திலே இந்த நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்கு பதவியாவிலே இருக்கக்கூடிய சிங்கள மக்களாகிய நீங்கள் நல்ல செய்திகளைச் சொல்லுவீர்கள்’ என்று தீர்க்கதரிசனத்தோடு அக்காலப் பகுதியிலேயே கூறியிருந்தார் .

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்கில் புள்ளிவிவரங்களின்படி 1891ஆம் ஆண்டு கிழக்கினுடைய ஒட்டு மொத்த சனத்தொகையிலே நான்கு வீதமானவர்கள் தான் சிங்களவர்கள். இன்னும் சில தகவல்கள் அதைவிட குறைவென்றே சொல்லுகின்றது. ஆனால் உத்தியோகபூர்வ தரவின்படி 4.6 வீதம் என்கிறோம். இன்று உத்தியோக புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தகவலின்படி 23.15 வீதமாகும். வெறும் நான்கு விதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை இப்பொழுது கிழக்கு மாகாணத்திலே 25 வீதத்தை தொட்டிருக்கிறது என்றால் இது ஒரு இயற்கையான நிகழ்வல்ல.

சிங்களத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் நன்கு திட்டமிட்ட முறையிலேயே மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் காரணமாக தமிழர்களுடைய இருப்பு கிழக்கிலே நலினப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த முயற்சி இப்போது வேகமாக வடக்கிலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வடக்கில், சிங்கள குடியேற்ற நிகழ்ச்சி நிரல் 1984 காலப்பகுதியிலேயே உச்சம் பெறுகிது. தமிழர்களின் இதய பூமியாக இருக்கக்கூடிய வடக்கையும், கிழக்கையும் பிரிக்கின்ற பகுதியில் இருக்கக்கூடிய டொலர்பாம், கென்பாம், நாகர் பண்ணை என்று சொல்லப்படுகின்ற வளமான பண்ணைகள் தமிழர்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வளமான 16 பண்ணைகளிலிருந்து எம்மவர்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற எல்லைப்புற கிராமங்கள் வடக்கையும், கிழக்கையும் இணைக்க கூடிய பாலமாக இருக்க கூடிய கிராம மக்கள் 1984 ஆம் ஆண்டு வெளியேற்றப்படுகிறார்கள். இந்த குடியேற்றங்களுக்குப் பின்னால் இராணுவ நிகழ்ச்சிகள் இருக்கிறது.


இப்போது நாங்கள் வெலிஓயா என்று சொல்லுகின்ற மணலாறு பிரதேச செயலகப் பிரிவிலே உள்ள கிராமங்களின் பெயர்களை எடுத்துப் பார்த்தால் ஜானகபுர அப்பிரதேசத்தினுடைய இராணுவத் தளபதியின் பெயரான ஜனகபெரேரா மருவி ஜானகபுர என்றும், அவருடைய மனைவி கல்யாணியின் பெயர் மருவி நவகல்யாணபுர, அவருடைய மகன் சம்பத் – சம்பத்நுவர என் பெயரிடப்பட்டுள்ளது,

இப்போது அண்மையிலே நாமல் பெயரில் நாமல்கம என இவையெல்லாம் புதிய கிராமங்களாக எங்களுடைய தாயகத்தை துண்டாடுவதை நோக்காக கொண்ட கிராமங்கள்.

உண்மையிலேயே யுத்த காலத்தில் எதிர்பார்த்த வேகத்திலே முன்னேற முடியாமல் போன சூழ்நிலையில், 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் முழு மூச்சிலே இப்பிரதேசங்களிலே சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

உண்மையிலே ஆரம்பத்திலே கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்ட அனேகமான சிங்கள குடியேற்றத்திட்டங்கள் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்பட்டன. அது மகாவலி திட்டமாக இருக்கலாம், கல்லோயா திட்டமாக இருக்கலாம், மாதுஓயா திட்டமாக இருக்கலாம் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற வடிவிலேயே கிழக்கு மாகாணத்திலே சனத்தொகை மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அப்பால் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்றவாறு மத்திய அரசாங்கத்தினுடைய ஆளுகைக்கு உட்பட்ட திணைக்களங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு அமைச்சின் இராணுவமும் இணைந்து நன்கு திட்டமிட்ட முறையிலேயே வடக்கினுடைய சனத்தொகையை மாற்றியமைப்பதற்காக சகல திட்டங்களையும் அரங்கேற்றி வருகின்றது.

மகாவலி ‘எல்’ வலையத்தின் அறிக்கைகளின்படி அவ்வலயத்திலேயே வவுனியா, திருகோணமலையினுடைய ஒரு பகுதி, முல்லைத்தீவினுடைய ஒரு பகுதி, அனுராதபுரத்தினுடைய ஒரு பகுதியை உள்ளடக்கிய வகையிலேயே ஒரு இலட்சத்து 99 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான ஹெக்டேர் நிலப்பரப்பில் 46 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுவிட்டன. இந்தக் குடியேற்றங்கள் வவுனியா மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் ஒன்றாக பாதித்திருக்கிறது.

போர் முடிந்த கையோடு ஒன்பது சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 9 கிராமங்கள் வெலியோயா என்கின்ற தனி ஒரு பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டு, அது முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்படுகின்றது. 7,017 சிங்களவர்கள் பதிவுகளின்படி அப்பிரதேசத்தில் குடியேற்றபட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலக பிரிவே போருக்கு பின்னால் உருவாகியிருக்கின்றது.

வவுனியாவில், ஏற்கனவே வவுனியா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிலே இருக்கக்கூடிய 14,028 சிங்களவர்களுக்கு மேலதிகமாக வவுனியா தமிழ் பிரதேச செயலகத்தோடு அண்மையிலே கள்ளிகுளம் என்ற கிராம சேவையாளர் பிரிவுகளோடு மகாவலி திட்டத்தினூடாக புதிதாக 4 கிராமங்கள் இணைக்கப்பட்டிருக்கிறன.

நாமல்கம, நந்தமித்ரகம, சங்கமித்தகம என்று நான்கு புதிய கிராமம் இணைக்கப்பட்டு 1,200 சிங்களக் குடும்பங்கள் வவுனியா தமிழ் பிரதேச செயலகப் பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலதிகமாக வவுனியா வடக்கு நெடுங்கேணியில், வோகஸ்வெவ-1 என்ற கிராம சேவையாளர் பிரிவு வெடிவைத்தகல் கிராம சேவையாளர் பிரிவோடு இணைக்கப்பட்டு 817 குடும்பங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

வவுனியா வடக்கில் உள்ள பிரதேச சபையின் அரசியல் பலம் பறிபோய் இருக்கின்றது என்றால் அது சிங்களக் குடியேற்றத்தினுடைய தாக்கம் என்பதை உணர முடியும். பாரம்பரிய தமிழ் கிராமமே இன்று தமிழரின் பெரும்பான்மையற்று்ப போயிருக்கின்றது” என தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7