
நீண்டகாலமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அதிக வேலைப்பழுவுடன் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், தமது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி போராட்டத்தை நடத்தினர்.
இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டுக் கோபுர வீதி வழியாக கண்டி வீதிக்கு சென்று, அங்கிருந்து கோசங்களை எழுப்பியவாறு வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையை அடைந்த அவர்கள், அங்கு போராட்டத்தை மேற்கொண்டனர்.
22 வருடங்களாக ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், எதுவித பணி மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள், தாம் சுதந்திரமாக கல்வியை கற்பிப்பதற்குரிய வழி வகைகள் எதுவும் செய்துதரப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதியொதுகீட்டை ஆறு வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் மறுத்துவருகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கான போராட்டத்தை இத்துடன் நிறுத்தாது, தொடர்ச்சியாக மாகாண மற்றும் தேசிய மட்டங்கள் வரை முன்னெடுத்து உரிமைகளை வென்றெடுக்கும் வரை போராடவுள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
