
தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மாநில கட்சியின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே நீர் நிலைகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்யாமல், ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டும்.
குடிநீர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய கட்சியல்ல. ஒரு குடும்ப கட்சி. பா.ஜ.க. ஒரு குடும்ப கட்சியல்ல. மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்துகொண்டு ஸ்டாலின் தண்ணீர் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்துகிறார். எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் அறிக்கையளிக்க வேண்டும்.
இதேவேளை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயற்படுத்த முடியாது என்பதுடன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக இத்திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்தாது” என அவர் தெரிவித்தார்.
