
தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள் எனவும், சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வராவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி என்ற வகையில் நிச்சயம் சாட்சியமளிக்க வேண்டும்.
பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற தெரிவுக் குழு நாடாளுமன்றத்திற்கு உரிய அறிக்கையினை சமர்ப்பிக்கும் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
