மின்னணு விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக, இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தமாக முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடைபெற்ற இந்த போட்டியின் தனிநபர் பிரிவில் வெற்றிபெற்ற 16 வயதான கைல் கியர்ஸ்டோர்ஃப் எனும் சிறுவனுக்கே அதிகபட்ச பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த லண்டனை சேர்ந்த 15 வயதான ஜோடென் அஷ்மான் எனும் சிறுவனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் தனிநபர் பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன், கைல் முகம் நிறைய சிரிப்புடன், தலையை அசைத்தவாறே கூட்டத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து கருத்துவௌியிட்ட கைல், “நான் வென்றுள்ள பரிசுத்தொகையின் பெரும்பகுதியை சேமிக்க விரும்புகிறேன். பிறகு, எனது கிண்ணத்தை வைப்பதற்கு ஒரு மேசையை வாங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
போட்டியின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் தனது சக போட்டியாளர்களை சிறிதும் தடுமாறாமல் சிரிப்பை வெளிப்படுத்தியவாறே கைல் தோற்கடித்த காட்சியை அனைவரும் ஆச்சர்யத்துடன் உற்றுநோக்கினர்.
இணையதளத்தை அடிப்படையாக கொண்ட விளையாட்டுத் துறையின் மதிப்பு இந்த வருடம் ஒரு பில்லியன் டொலர்கள் எனும் இமாலய அளவை தொடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
ஆனால், இந்த மிகப் பெரிய பரிசுத்தொகையை தோற்கடிக்கும் மற்றொரு போட்டிக்கான திகதி ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் ஒகஸ்டு மாதம் நடைபெறவுள்ள ‘தி போர்நைட்’ போட்டியில் சுமார் 100 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கு முன்னதாக, பத்து வாரங்களாக இணையதளத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் உலகம் முழுவதும் இருந்து சுமார் நான்கு கோடி பேர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது