ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைதொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை உடன் அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்ரேலியா தளர்த்தியுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்ரேலியர்கள் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச்சாவடிகளிலும் மற்றும் வீதிகளில் செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமரின் கோரிக்கைகளுக்கு அமைவாக இதற்கு முன்னர் சீனா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, சுவீடன், இந்தியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் பயண எச்சரிக்கைகளை தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





