
பெயரை அறிவித்ததும் மஹிந்த அணியினர் அரசியலிருந்து முழுமையாக வெளியேறும் நிலைமை ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்
கம்பளை மாவில பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வேலுகுமார் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம்.
இதன்போது வேட்பாளர் பெயரை கேட்டவுடன் எமக்கு எதிராக போட்டியிட தீர்மானித்துள்ள அரசியல்வாதிகள் அஞ்சும் நிலைமை ஏற்படும்.
மேலும் ஜனநாயகத்தை முழுமையாக கேள்விக்குறியாக்கிய சட்டமே 18 ஆவது திருத்தச்சட்டமாகும். மேலும் மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் தனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
குறித்த சட்டத்தை தொடர்ந்து நீடித்திருந்தால் நாட்டுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும். ஆனாலும் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை நாம் நிலைநாட்டினோம்.
இதேவேளை மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தினால் இந்த நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி கருதுவது தவறானது” எனவும் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
