
உறவினர்கள் மேற்கொண்ட போராட்டத்தை கவனத்தில் கொள்ளாது சென்றதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தமது பிரதிநிதிக்ள இவ்வாறு கண்டுகொள்ளாது சென்றமையானது வருத்தத்தை ஏற்படுத்துவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் இருந்து சென்று மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் எனும் தகவல் முன்னதாகவே தமிழரசு கட்சியின் உயர் பீடத்திற்கு கிடைத்துள்ளது. அதனையடுத்து அவர்களின் மாநாட்டு மண்டபத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு கோரி இருந்தார்கள்.
இதனடிப்படையில் வீரசிங்கம் மண்டபத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதியம் 12 மணியளவில் வவுனியாவில் இருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் எவரும் பேச்சுக்கு வரவில்லை எனவும் மண்டபத்திற்குள் அழைத்து பேசவில்லை எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
மாநாடு முடிவடைந்ததும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது அங்கிருந்து வௌியேறிச் சென்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
