
எனவே, குறித்த தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்யவேண்டும் என மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
ஏனைய நாடுகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தாம் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் மறுசீரமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உணரத் தொடங்கியிருப்பதுடன், மரண தண்டனையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இலங்கை அதற்கு மாறாக செயற்படுகின்றது என்று மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கைக்குக் காணப்படும் அங்கீகாரத்திற்கு பெரும் பாதகமாக அமையும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் நபர்கள், அவர்கள் தொடர்புபட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிராஜ் பட்நாய்க் தெரிவித்துள்ளார்.
இத்தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதால் குறித்த மரண தண்டனைக் கைதிகள் கருணை மனுவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது இதிலிருந்து மீள்வதற்கோ வாய்ப்பில்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
அந்த நான்கு கைதிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்விடயம் குறித்து அறிவிக்கப்பட்டமை குறித்தும் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்றும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
அத்துடன், மிகக் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும், இழிவானதுமான இந்தத் தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைக்கின்றார் எனவும் மன்னிப்புச்சபை சாடியுள்ளது.
மரண தண்டனைக் கைதிகள் வரிசையிலுள்ள நால்வருக்கு விரைவில் தண்டனை அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.
போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் நடத்திய விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
