
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தைப் பெறும் குழுவின் தலைவர், சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுப்பதாக உறுதிமொழியளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை கோரி பலவித கருத்துக்களை வௌியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மனிதவுரிமைகள் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அத்துடன், சுயாதீன நிறுவனங்களுக்காக தமக்கு தேவையானவர்களை நியமிக்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும் கூறும் ஜனாதிபதி, முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தை பணயம் வைத்து செயற்பட்ட விதத்தில் தனக்கும் செயற்பட முடியாதுள்ளது என்பது குறித்து கவலையடைந்திருப்பதை சுட்டிக்காட்டுவதற்கு முயற்சிக்கிறார் என்று சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
இதனூடாக பொதுமக்கள் கோரியிருந்த சுயாதீன ஆட்சி முறைக்கு பதிலாக மீண்டும் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சியை ஸ்தாபிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றளவில் இலங்கை மக்களின் மனிதவுரிமைகள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் முழு கட்டுப்பாடும் சுயாதீன ஆணைக்குழுவின் வசம் உள்ளது.
பொலிஸ் துறையை சுயாதீனமாக செயற்படுவதற்கும் இந்த 19ஆவது திருத்தமே வழிவகுத்துள்ளது. அதனால், அமைச்சர்களின் மனைவியையோ, மகளையோ சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கும் பொலிஸாருக்கு இன்று சுயாதீன அதிகாரம் உள்ளது. அதற்கு உதாரணமாக ஜனாதிபதி செயலகத்தின் செயற்குழு பிரதானியை கைது செய்வதற்கு அண்மையில் வாய்ப்பு கிடைத்தது.
அதேபோன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அரசியல் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் நீதிமன்றத்தினால் சுயாதீன தீர்ப்பை வழங்க முடியுமாக இருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக இந்த போராட்டத்தை மறுபுறம் புரட்டுவதற்கு நாட்டின் பிரதானியான ஜனாதிபதி செயற்பட்டமை வருந்தத்தக்கது.
தனக்கு ஏறத்தாழ 60இலட்சம் பேர் வாக்களித்தார்கள் என்று ஜனாதிபதி கூறுகிறார். எனினும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு வலியுறுத்திதான் பொதுமக்கள் வாக்களித்தார்கள். அதிலுள்ள விதிகளை நடைமுறைப்படுத்துமாறும், சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பது அவசியம் என்று வலியுறுத்தியே நாட்டு மக்கள் வாக்களித்தார்கள் என்று சட்டத்தரணி லால் விஜேநாயக்க தனதுரையில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து, அவற்றை நாடாளுமன்றத்திடம் கையளிக்குமாறு பொதுமக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்கள். எனினும் துரதிஷ்டவசமாக அந்த செயற்பாடுகள் எதுவும் சீராக இடம்பெறவில்லை என்று அவர் வருத்தம் வௌியிட்டார்.
இந்த தருணத்தில் ஜனாதிபதி மாற்றுக்கருத்துக்களை வௌியிடுவது சரியானதல்ல என்பதுடன் இது பொதுமக்களை திசை திருப்பும் விதமான செயலாகவே இது பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
