நாட்டை சீர்குலைக்கும் வகையில் பிரதமர் அறிவுபூர்வமாக செயற்பட்ட அனைத்தும் போதும் எனவும் இனியேனும் நாட்டின் நலன்கருதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ” நாட்டைப் பாதுகாப்பதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான விரிவான கூட்டணியொன்றை அமைத்துக்கொள்வதற்கு எந்தவொரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் தற்போது வெறுமனே பேசிக்கொண்டிருப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. சிந்தித்து அறிவுபூர்வமாகச் செயற்படுவதன் மூலமே அதனைச் செய்ய முடியும் என பிரதமர் கூறுகிறார்.
29 தடவைகள் தோற்று, சதித்திட்டத்தின் மூலம் பதவிக்கு வந்ததுடன், இதுவரை காலமும் நாட்டில் இருந்திராத தீவிரவாதம் நாட்டிற்குள் தலைதூக்கவிட்டு, மக்கள் அச்சத்துடன் இருக்கும் நிலையை பிரதமர் ஏற்படுத்துக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு புத்திசாதுரியமாகச் செயற்பட வேண்டிய சூழ்நிலை என்பதாலேயே நாடு பல்வேறு பிரச்சினைகள் இருக்கையில் பிரதமர் அமைதியாக இருக்கின்றார். இந்த நாட்டை சீர்குலைக்கும் வகையில் பிரதமர் அறிவுபூர்வமாக செயற்பட்ட அனைத்தும் போதும். இனியேனும் நாட்டின் நலன்கருதி தேர்தலை நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.





